Sunday, January 8, 2012

நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்தானே' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புயல் சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை, நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான குழு சனிக்கிழமை காலை தமிழகம் வந்தது. மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வேளாண்மைத் துறை இயக்குநர் கே.மனோகரன், மத்திய நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதுநிலை மண்டல இயக்குநர் பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குநர் விவேக் கோயல், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளிதரன், மத்திய குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா சௌத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை நிர்வாக இயக்குநர் பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்திய குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று புதுச்சேரி பயணம்: மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. மேலும், பாதிப்பு குறித்த படத்தொகுப்புகளும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், அவற்றைச் சீர்செய்வது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனு தமிழகத்தின் சார்பில் மத்திய குழுவினரிடம் அளிக்கப்பட்டது. மத்திய குழுவினர் தங்களது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தொடங்குகின்றனர். முதலில் அவர்கள் புதுச்சேரி செல்லவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு முழு அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் அவர்கள், திங்கள்கிழமை (ஜனவரி 9) கடலூர் செல்கின்றனர். இரண்டு நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், செவ்வாய்க்கிழமை சென்னை வரவுள்ளனர். இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. விரிவான ஆலோசனைக்குப் பின் அவர்கள் தில்லி செல்லவுள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடி தேவை? புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், எதிர்காலத்தில் புயல் போன்ற பேரிடர் ஏற்பட்டால் அதில் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று தமிழக அரசு மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும். இந்த அறிக்கையை பரிசீலிப்பதற்கென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கொண்ட குழு தனியாக உள்ளது. அந்தக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என மத்திய அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment