Monday, February 6, 2012

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கேமராவில் கண்காணிக்கப்படும்- புதிய தலைவர் ஆர்.நடராஜ் பேட்டி


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்கள், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செல்லமுத்து கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார். புதிய டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஆர். நடராஜ் இன்று காலை பொறுப்பேற்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்த பணியை தந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசு பணி என்பது தெய்வீக பணியாகும். அது ஒரு கொடை. அந்த பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை திறமையாக பயன்படுத்துவேன். அரசு பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேருபவர்கள் தங்கள் பணியை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசு பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன்.

நான் முதலில் செய்யப்போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. அந்த புகை மண்டலம் அகற்றப்படும். வெளிப்படையான நிர்வாகம் செய்யப்படும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்தப்படும். ஆட்சேபனை இருப்பவர்கள் அதை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.

ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணைய தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும். தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் அனைத்து தேர்வுகளுக்கும் இது போன்ற கேள்விகள் கேட்கப்படும். எந்தெந்த பாடங்கள் கேட்கப்படும் என்பது பற்றிய பாடத்திட்டங்கள், மாதிரி வினாத்தாள்கள் இணைய தளத்தில் வெளியிடப்படும். ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும்.

அரசுப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப்பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். பணிக்கு வருபவர்களின் பகுத்து அறியும் திறனை ஆராயும் வகையில் தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். தேர்வாணையம் மூலம் பல்வேறு தேர்வுகள் நடத்தினாலும் கல்வித் தகுதி ஒன்றாகவே இருக்கிறது.

எனவே ஒருமுறை விண்ணப்பித்தால் போதும் அவர்களுக்கு ஒரு குறியீடு வழங்கப்படும். அடுத்த பதவிக்கு தேர்வு எழுத அந்த குறியீட்டின் அடிப்படையிலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். தேர்வாணைய இணைய தளம் புதுப்பிக்கப்படும். அதில் புதிதாக பல தகவல்கள் சேர்க்கப்படும். தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேர்வாணையத்துக்கென்று தனி விதிமுறைகள் உள்ளது. அதை அமுல்படுத்துவோம். அந்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என்றால் அரசிடம் முறையிட்டு மாற்றம் கொண்டு வரப்படும். லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர் சமுதாயத்துக்கு கொடுப்போம்.

நேர்மையாக படித்தால் நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப்பணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுப்பேன். இப்போதுதான் நான் தலைமை பதவி ஏற்றுள்ளேன். எந்த தவறும் நிகழ விடமாட்டேன். தவறுகளை தட்டிக்கேட்பேன்.

இவ்வாறு ஆர்.நடராஜ் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு 1,200 இளநிலை உதவியாளருக்கு பணி நியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் வழங்கினார்


கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது தற்காலிக பணியாளர்களாக 15 ஆயிரம் இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் தி.மு.க. ஆட்சியில் அவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இதில் 1,200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் விடுபட்ட 1200 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்க அரசு முடிவு செய்தது. இதற்காக இன்று முதல் 5 நாட்களுக்கு அரசு தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. இன்று 250 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதனை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் வழங்கினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு பணி நியமன ஆணை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆற்காடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் பாலத்தில் கவிழ்ந்து விபத்து: மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் உள்பட 30 பேர் படுகாயம்


ஆற்காடு அருகே என்ஜினீயரிங் கல்லூரி பஸ் பாலத்தில் கவிழ்ந்தத விபத்தில் மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் உள்பட 30 பேர் படுகாயமடைந்தனர். என்ஜினீயரிங் கல்லூரி பஸ் ஆற்காடு அடுத்த திம்மசமுத்திரம் அருகே தனியார் என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. வேலூர் மற்றும் ஆற்காடு சுற்றுபுற பகுதியில் படிக்கும் மாணவர்களை கல்லூரி பஸ் தினமும் செல்வது வழக்கம்.
 
இன்று காலை 25 மாணவர்கள் 2 மாணவிகள், பேராசிரியர்களை ஏற்றிக்கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆற்காடு- செய்யாறு ரோட்டில் டெல்லி கேட் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்த தடுப்பில் பஸ் மோதியது. இதில் நிலைதடுமாறிய பஸ் சுமார் 10 பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவர்கள் அலறினர்.
 
அப்பகுதியில் வேலூர் மேயர் கார்த்தியாயினி தனது கணவர் அனுஷ்குமாருடன் காரில் சென்று கொண்டிருந்தார். விபத்தை பார்த்த இவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். இந்த விபத்தில் பேராசிரியர் மணிகண்டன்(30), செந்தில் (40), கணபதி (40), மாணவிகள் தமிழ்செல்வி (19), பரமேஸ்மரி (19), மாணவர்கள் சதீஷ்குமார், பாபு, லோகன் உள்பட 30பேர் படுகாயம் அடைந்தனர்.
 
ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரம் ஆனதால் அப்பகுதியில் வந்த தனியார் பள்ளி பேருந்தில் படுகாயம் அடைந்தவர்களை ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்விஷாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் 15 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.