Saturday, January 7, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி புத்தகங்கள் பிரமுகர்கள்

 சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி: சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பெüத்த மதம் பரவியிருந்த நகரங்கள் மற்றும் பல்வேறு பயணக் குறிப்புகளை சீன மொழியில் எழுதி வைத்திருந்தார். இது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. இது இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "யுவான் சுவாங்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை சி.முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். இதன் ஆங்கில மொழியாக்க நூலை ஏற்கெனவே படித்திருந்தேன். இருப்பினும், தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் இந்த நூலைத் தேர்வு செய்தேன்.  அதேபோல சுந்தர வந்தியதேவன் எழுதியுள்ள "பிரமலை கள்ளர்' என்னும் நூலையும் வாங்கினேன். மதுரை பகுதியில் வாழும் பிரமலை கள்ளர்களின் சமூக, சரித்திர சூழல் பற்றிய நாவல் இது. சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் இந்த 2 நூல்களையும் தேர்வு செய்தேன். இரு நூல்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்: வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ள ஜெயமோகன் எழுதிய "அறம்' என்னும் சிறுகதைகள் தொகுப்பு, தமிழினி பதிப்பகத்தின் "சிலம்பின் காலம்', தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழிசை கட்டுரைத் தொகுப்பு' ஆகியவற்றை வாங்கினேன். தமிழ் இலக்கியம் தொடர்பாக வெளிவரும் புதிய புத்தகங்களை உடனுக்குடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  நவீன இலக்கியம், பழங்கால இலக்கியம் ஆகிய இரண்டிலும் தீவிர ஆர்வம் இருப்பதால் இந்த நூல்களை வாங்கினேன்.  எழுத்தாளரும், முன்னாள் டிஜிபியுமான ஜி.திலகவதி: எனது 3 வயதுப் பேத்தி அதுல்யாவுக்காக பல புத்தகங்களைத் தேர்வு செய்தேன். ஹிட்லர், நெல்சன் மன்டேலா, இந்திரா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட சர்வதேச, தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஓவியப் புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.  எழுத்தாளர் அழகிய பெரியவன்: இந்த முறை மொழிபெயர்ப்பு நூல்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். கூ கி வா தியாங்கோ என்ற ஆப்பிரிக்க எழுத்தாளரின் "பூமிக்குள் ஓடுகிறது நதி', "சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற மொழியபெயர்ப்பு நூல்களை வாங்கினேன். இது தவிர இளம் கவிஞர்கள் சிலரது கவிதை நூல்களையும் வாங்கியுள்ளேன்.

முதல்முறையாக பார்வையற்றவர்களுக்கான புத்தகங்கள்

சென்னை, ஜன.6: புத்தகக் கண்காட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  க்ரியா பதிப்பக அரங்கில் இவை வைக்கப்பட்டுள்ளன. இந்திய பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை இந்தப் பதிப்பகம் உருவாக்கியுள்ளது.  இந்த அரங்கில் ஆகாயத் தாமரை, அக்னிச் சிறகுகள், திருக்குறள் மூலமும் உரையும், விதியை வென்றவர்கள், லூயி பிரெயில், ஒüவையார் பாடல்கள், நன்னூல்-கூழங்கைதம்பிரான் உரை, நீர் யானை முடியுடன் இருந்தபோது, இதுதான் இஸ்லாம், கடற்புரத்து கிராமம், காற்றில் வந்த கருத்து மழை உள்ளிட்ட 40 வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் முறையில் எழுதப்பட்டவை. இதில் 4 ஆங்கிலப் புத்தகங்களும் உள்ளன. இந்தப் புத்தகங்களை வாங்க விருப்பம் உடைவயவர்கள் இந்த அரங்கில் உரிய பணத்தை செலுத்திப் பதிவு செய்து கொண்டால் போதும்.  அவர்களது வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மதுரையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான சங்கம் மூலம் இது அனுப்பி வைக்கப்படும். முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெயில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது அனைத்து படைப்பாளிகளையும், வாசகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.  இது குறித்து கூடுதல் விவரம் அறிய 9600833226 என்ற செல்போனில் தொடர்புகொள்ளலாம்.

எம்.ஜி.ஆர். திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கப்பட்ட படப்பிடிப்பு தளம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கப்பட்ட படப்பிடிப்பு தளத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இந்தத் தளம் ரூ.1.43 கோடியில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்புத் தளம் சுமார் 120 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. இந்தத் தளம், 2 சிறிய படப்பிடிப்பு கூடங்கள் கொண்டது. இந்த படப்பிடிப்பு தளம் சிறந்த ஒலி மற்றும் ஒளி பதிவு செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆடை மாற்றும் அறைகள், தையல் கூடம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.  புகைப்பட மாடம்: முதல்வர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்படும் மக்கள் நல சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படத் தொகுப்புகள் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் 6-வது நுழைவு வாயிலில் ஒரு மாடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடத்தையும் முதல்வர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, துறையின் இயக்குநர் சங்கர், செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.