Sunday, January 8, 2012

இந்தியாவின் முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை: இராக் இளைஞருக்கு வழியனுப்பு விழாஇந்தியாவில் முதன்முதலாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள இராக்கைச் சேர்ந்த இளைஞருக்கு வழியனுப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இராக் நாட்டைச் சேர்ந்த கரீம் ஹமீத் அமீன் (33) நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம்தான் உயிர் பிழைக்க முடியும் என்று அறிவுறுத்தினர். அப்போது விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்ட 18 வயது இளைஞரின் நுரையீரலை கரீமுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலைமை இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 4 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து கரீமுக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனர். தற்போது நன்கு குணமடைந்து இராக் நாட்டிற்கு செல்லும் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. விழாவில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் பேசும்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தில் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 25 நுரையீரல் நோயாளிகள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளனர் என்றார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.கந்தன், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி உமா நம்பியார், நுரையீரல் நோய் மருத்துவர்கள் விஜில் ராகுலன், கோவினி பாலசுப்ரமணி, மயக்கவியல் மருத்துவர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment