ராமேசுவரத்தில், தொடர்ந்து 2-ம் நாளாக மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பகல் முதல் வியாழக்கிழமை பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபட்டது.இதன்பின்னர், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும் மின்தடை செய்யப்பட்டது.தொடர்ந்து 2 நாள்களாக மின்தடை ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கொசுத் தொல்லையாலும், இரவில் தூங்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் கடந்த இரு நாள்களாக நகராட்சி தெருக் குழாய்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஒரு குடம் ரூ. 5 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், மின்தடை பிரச்னையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகம் முன்பாக அனைத்துக்கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.காங்கிரஸ் நகர் தலைவர் பாரிராஜன், பாஜக தேசியக் குழு உறுப்பினர் முரளீதரன், திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், நாசர்கான், சிபிஎம் கட்சியின் முன்னாள் செயலர் கருணாகரன், தேமுதிக செயலர் முத்துகாமாட்சி, இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி, பாஜக நகர் பொதுச் செயலர் ராம்பிரசாத், இந்து மக்கள் கட்சி நிர்வாகி நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment