முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப்பகுதி, பள்ளக்குழி கிராமம் அருகே 30.6.2013 அன்று கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது வனக்காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோர் கரடியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
சம்பவ தினத்தன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை வலையில் கட்டி மீட்டு வெளியில் கொண்டு வந்தபோது, வலையிலிருந்து விடுபட்டு அருகில் நின்றிருந்த பொதுமக்களைத் தாக்க முற்பட்ட கரடியினை வனக்காப்பாளர் ரஹமத்துல்லா தைரியத்துடன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கரடி அவரது தலையிலும், முகத்திலும் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார்.
ரஹமத்துல்லாவை கரடியிடமிருந்து மீட்க முற்பட்டபோது, வனக்காப்பாளர் ரமேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கரடி துரத்தியதில் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் அவரது வயிற்றில் அடிப்பட்டுள்ளது. வனக்காப்பளர் ரஹமத்துல்லா சமயோசிதமாக யாருடைய உந்துதலும் இன்றி, தனது உயிரையும் துச்சமென மதித்து, கரடியுடன் போராடி பொதுமக்களை காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சலான செயல்பாட்டிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் ரஹமத்துல்லா அவர்களுக்கு உதவிய வனக்காப்பாளர் ரமேஷ் அவர்களையும் நான் பாராட்டுகிறேன். வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீரச்செயலையும், தன்னலம் கருதாத சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இந்நிகழ்வில் காயமடைந்த வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து அரசு செலவில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் நான் கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்படின், சென்னையிலுள்ள மிகச்சிறந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் இவர்களுக்கான முழு மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment