சென்னை, ஜன.6: புத்தகக் கண்காட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. க்ரியா பதிப்பக அரங்கில் இவை வைக்கப்பட்டுள்ளன. இந்திய பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை இந்தப் பதிப்பகம் உருவாக்கியுள்ளது. இந்த அரங்கில் ஆகாயத் தாமரை, அக்னிச் சிறகுகள், திருக்குறள் மூலமும் உரையும், விதியை வென்றவர்கள், லூயி பிரெயில், ஒüவையார் பாடல்கள், நன்னூல்-கூழங்கைதம்பிரான் உரை, நீர் யானை முடியுடன் இருந்தபோது, இதுதான் இஸ்லாம், கடற்புரத்து கிராமம், காற்றில் வந்த கருத்து மழை உள்ளிட்ட 40 வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் முறையில் எழுதப்பட்டவை. இதில் 4 ஆங்கிலப் புத்தகங்களும் உள்ளன. இந்தப் புத்தகங்களை வாங்க விருப்பம் உடைவயவர்கள் இந்த அரங்கில் உரிய பணத்தை செலுத்திப் பதிவு செய்து கொண்டால் போதும். அவர்களது வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மதுரையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான சங்கம் மூலம் இது அனுப்பி வைக்கப்படும். முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெயில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது அனைத்து படைப்பாளிகளையும், வாசகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இது குறித்து கூடுதல் விவரம் அறிய 9600833226 என்ற செல்போனில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment