Wednesday, December 28, 2011

தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே சமாதானத்தை கொண்டுவர பிரதமர் தவறிவிட்டார்:பா.ஜ.க.குற்றச்சாட்டு


எல் .கணேசன்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கேரளத்திற்கும் இடையே சமாதானத்தை  கொண்டுவர  பிரதமர் தவறிவிட்டார் என்று தமிழ்நாடு பா.ஜ.கட்சியின் முன்னாள்  தலைவர் எல் .கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், வாஜ்பாய்  பிரதமராக இருந்த போது காவேரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில முதல்வரையும் கர்நாடக மாநில முதல்வரையும் அழைத்து அவர்களுடன் 7 மணி நேரம் விவாதம் நடத்தினார் என்றும் அவர்  குறிப்பிட்டார்.
இந்த அணை பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும்.தற்போது நிறைவேற்றப்பட்ட  லோக்பால் மசோதா வலுவற்றது. இந்த லோக்பாலை  கொண்டு   ஊழலை ஒழிக்க  முடியாது எனவும் தெரிவித்தார்.

Tuesday, December 27, 2011

லோக்பால் மசோதா : சசி தரூர் கருத்து


பார்லிமென்டில் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய எம்.பி., சசி தரூர் கூறியதாவது, லோக்பால் மசோதா தாக்கல் செய்வதற்கான தருணம் தற்போது வந்துவிட்டதாக நான் உணர்கிறேன். லோக்பால் மசோதா, வலுவானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தவொரு மாற்றுக் கருத்துமில்லை. வலுவற்ற மசோதாவால், ஜனநாயகத்திற்கே பெருங்கேடு ஏற்படும். எனவே, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நடந்தாலும் தப்பில்லை என்றே நான் கூறுவேன் என்று அவர் கூறினார்.

மீன்பிடி படகு சவாரிக்கு தடை செய்ய வேண்டும்:கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ

பொன்னேரி:""மீன்பிடி படகுகளில் பயணிகள் சவாரி செய்வதை தடை செய்ய வேண்டும்,'' என, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சேகர் கூறினார். அவர் கூறியதாவது:விசேஷ தினங்களில், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு தேவையான எவ்வித பாதுகாப்பு வசதியும் அங்கு இல்லை.
படகு சவாரியை விரும்பும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தான ஏரி மற்றும் முகத்துவார பகுதிகளில் வலம் வருகின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலிகள் தொடர்கின்றன. மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் படகுகளில், பயணிகள் பயணம் செய்ய தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு சேகர் கூறினார்

A.I.A.D.M.K. GENERAL SECRETARY SELVI J.JAYALALITHA’S BIRTH DAY PROGRAMME


A.I.A.D.M.K. GENERAL SECRETARY SELVI J.JAYALALITHA’S BIRTH DAY PROGRAMME

Monday, December 26, 2011

புதுமையான போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த் பேட்டி


தியாகராயநகர் திருமண மண்டபத்தில் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
முல்லைப்பெரியாறு பிரச்சினையில் எனது உணர்வுகளை, கட்சி உணர்வை எடுத்து காட்டும் வகையில் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினோம். முதலில் 2 அடுக்கு பாதுகாப்பு என்றார்கள். பிறகு 4 அடுக்கு பாதுகாப்பு என்றார்கள். அவர்கள் எவ்வளவு பாதுகாப்பு போட்டிருந்தாலும் சரி எங்களது போராட்டம் வெற்றிகரமாக நடந்தது.
 
முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆகட்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினையாகட்டும், காவிரி பிரச்சினையாகட்டும் எல்லா விஷயங்களிலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. கேரளா - கர்நாடகா மாநிலங்கள் தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக புதுமையான போராட்டம் நடத்துவேன்.
 
2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் திறக்கும் ஆஸ்பத்திரி, அதேபோல் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் திறக்கும் ஆஸ்பத்திரி ஆகிய விழாக்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கணிதமேதை ராமானுஜன் விழாவில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
 
இந்த அரசு விழாவை காரணம் காட்டிதான் தனியார் விழாக்களுக்கு செல்கிறார்கள். வித்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். திருச்சியில் இருந்து விமானத்தில் பறந்து செல்கிறார் பிரதமர். இதுதான் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் நல்லகாரியமா? முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு கருணாநிதி ஆட்சி காலத்திலேயே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
 
அப்போது கூட்டணி கட்சியில் இருந்ததால் அதை செயல்படுத்தாமல் விட்டு விட்டார்கள். கருணாநிதியும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமரை சந்திப்பது, மனு கொடுப்பது என்று மாறி மாறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினால், நானும் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறேன்.
 
முல்லைப்பெரியாறு பிரச்சினை, கூடங்குளம் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் தென்மாவட்ட மக்களை பார்த்திருக்க வேண்டியதுதானே! எங்களது போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் கைதாகி இருக்கிறார்கள். சென்னையில் 5 ஆயிரம் பேர் கைதாகி இருக்கிறார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.